நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை நீட் தேர்விற்கான தமிழக அரசின் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த முறையை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 198 நகரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (13-07-2021) மாலை 5 மணி முதல் மாணவர்கள் நீட் தேர்விற்காக ஆன்லைன் மூலம் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விற்கான தேதி வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் மாணவர்கள் நீட் தேர்விற்கு தாயார் செய்ய வேண்டுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் சட்டரீதியாக விலக்கு பெறப்படும் வரை மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment