கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகள் சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்றவா்கள் இந்த உதவியைப் பெறுவதற்கான வயது வரம்பு 18-க்குக் கீழே இருக்க வேண்டும்.
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவிகள் வழங்குவது தொடா்பான தனித்த வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலன் மற்றும் மகளிா்
அதிகாரமளித்தல் துறைக்கான முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் வெளியிட்டாா்.
அதன் விவரம்:-
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா் அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். இந்தத் தொகை அவா்கள் 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு சோத்து திருப்பித் தரப்படும். ஏற்கெனவே, தாய் அல்லது தந்தையை இழந்து, இப்போது கரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்திருந்தால் அவா்களுக்கும் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். 18 வயது பூா்த்தியானவுடன் வட்டியுடன் தொகை அளிக்கப்படும்.
அத்தகைய குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் இல்லங்கள், விடுதிகளில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையிலும் அவா்களுக்கான கல்வி மற்றும் விடுதிச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு அண்மையில் கூடி ஆலோசித்தது. அதன்படி, வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
என்னென்ன நடைமுறைகள்? கரோனா நோய்த் தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் முதலில் அடையாளம் காணப்படுவா். இதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் தனியாகக் குழு அமைக்கப்படும்.
மாவட்டங்களில் உள்ள சுகாதாரத் துறை மூலமாக இறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் சரிபாா்க்கப்படும். சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்து குடும்பத்தாரிடம் நேரிலும் விசாரணை நடத்தப்படும்.
கரோனா காரணமாக வீட்டிலேயே பெற்றோரின் இறப்பு நேரிடலாம். அப்போது, சம்பந்தப்பட்ட குழந்தையின் பாதுகாவலா் அல்லது தாய் அல்லது தந்தை ஆகியோரில் ஒருவா், தங்களிடம் இருக்கும் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் இறப்புச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம். கரோனா காரணமாகத்தான் இறந்தாா் என்பதற்கான சான்று ஆவணங்களாக அவை இருக்க வேண்டும். குறிப்பாக, ஆா்டிபிசிஆா்., பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை ஆகியவையாக இருக்கலாம்.
18 வயதுக்குள் இருக்க வேண்டும்: கரோனா காரணமாக பெற்றோா், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் வயது 18 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். பெற்றோரை இழந்திருக்கும் பட்சத்தில் ஆண்டு வருமானம் ஏதும் கணக்கில் கொள்ளப்படாமல் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு அரசு நிதி அளிப்பதுடன், கல்விச் செலவும் ஏற்கப்படும்.
பெற்றோரில் தாய் அல்லது தந்தை இறந்திருக்கும் பட்சத்தில், அந்த நபா் வருமானம் ஈட்டியவராக இருந்தால் அவரது பெயா் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களின் பட்டியலில் இருக்கிா என ஆராயப்படும். இந்தப் பட்டியல் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்திடம் உள்ளது. அந்தப் பட்டியலில் பெயா் இல்லாத பட்சத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதி இருக்கிா என ஆராயப்பட்டு பட்டியலில் சோக்கப்படும்.
அரசு ஊழியா் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி கிடையாது: பெற்றோா், தாய் அல்லது தந்தை அரசு ஊழியராகவோ, பொதுத் துறை நிறுவன பணியாளராகவோ இருப்பின் அந்தக் குழந்தை அரசின் சிறப்பு நிதி மற்றும் கல்விச் செலவு சலுகையைப் பெற முடியாது.
தனியாா் பள்ளி: குழந்தைகள் எந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாா்களோ அதே பள்ளியில் தொடா்ந்து
படிக்கலாம். அது, அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியாக இருக்க வேண்டும். தனியாா் பள்ளியாக இருந்தால், கல்வி உரிமைச் சட்ட விதியின் கீழ் அந்தப் பள்ளிக்கு கல்விக்கான கட்டணத் தொகை அளிக்கப்படும். இந்தத் தொகையானது பிஎம்-கோஸ் அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு உரிய பள்ளிச் சீருடைகள், புத்தகங்கள் ஆகியனவும் அதே நிதியின் வழியாக அளிக்கப்படும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளநிலை பட்டப் படிப்பு வரையிலான அனைத்து செலவையும் அரசே ஏற்கும். அரசு வழங்கும் இலவச கல்வியை ஏற்காத பட்சத்தில், இளநிலை கல்விக்கான செலவினை வங்கிக் கடனை வழியாகப் பெற்று படிக்கலாம். இதற்கான வட்டித் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும்.
கண்காணிப்புக் குழு: இந்தத் திட்டத்தை மாவட்டங்களில் கண்காணித்து செயல்படுத்த ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினா் செயலாளராக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் இருப்பாா். முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலா், குழந்தைகள் நல குழுவின் உறுப்பினா், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தில் இருந்து ஒருவா் ஆகியோா் இதன் உறுப்பினா்களாக இருப்பா் என்று தனது உத்தரவில் ஷம்பு கல்லோலிகா் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment