புதுடில்லி : 'மாநில அரசுகள், அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்காக ஒப்படைக்கும் இடங்களில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்காக, மாநில அரசுகள் ஒப்படைக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதேபோன்ற மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்காக காத்திருக்கலாம் எனக் கூறி, விசாரணையை தள்ளி வைத்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு, கடந்த, 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், 'அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்காக ஒப்படைக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, விரைந்து விசாரிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி, எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தது.அப்போது, 'மாநில அரசுகள், அகில இந்திய மருத்துவ மாணவர் களுக்காக ஒப்படைக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு மற்றும் சிலர், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 'இந்த மனுக்கள் அனைத்தையும், சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்' என, அமர்வு உத்தரவிட்டது.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், விரைவில் அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என, தெரிகிறது.தமிழக அரசு போக, அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., -ம.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாநிலங்கள், அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்காக ஒப்படைக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளன.
Monday, 13 July 2020
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி., இடஒதுக்கீடு சென்னை ஐகோர்ட் விசாரிக்க உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment