'அரசு பஸ்களை அடுத்த வாரம் முதல் இயக்குவது, அரசின் கொள்கை முடிவு. அனுமதி கிடைத்தால் இயக்குவோம்' என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினர். போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
அப்போது, போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை, முதல்வர் கேட்டறிந்தார்.அத்துடன், 'பெரும்பாலான பஸ்களில், திருக்குறள் இல்லை. சில பஸ்களில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.எனவே, அனைத்து பஸ்களிலும், திருவள்ளுவர் படத்துடன், திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை எழுத, நடவடிக்கை எடுங்கள்' என, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
பஸ்கள் இயக்கம் : தமிழகத்தில், முழு ஊரடங்கு வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. தற்போது, அரசு அலுவலகங்களில், 30 சதவீதப் பணியாளர்கள் பணி செய்ய, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஆனால், அத்தியாவசியப் பணிகளுக்கான துறைகளில், 100 சதவீதப் பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பஸ் போக்குவரத்தை துவக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில், அடுத்த வாரம் முதல், மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்தை அனுமதிக்க, அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாகவும், முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, 'பஸ் போக்குவரத்தை துவக்குவது என்பது, அரசின் கொள்கை முடிவு. இதை முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார். பஸ்களை இயக்க அனுமதி கிடைத்தால், அவற்றை இயக்க தயாராகவே உள்ளோம்' என்றனர்.
No comments:
Post a Comment