Breaking

Thursday, 27 August 2020

டிஜிட்டல் வழி கல்வியால் மாணவர்களுக்கு ஒரு சுமையும் ஏற்படாது! -உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!


டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது என, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆபாச இணையத்தளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இணையத்தள சேவை குறைபாட்டால், பெரும்பாலும் உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடங்கள் கற்பிப்பது தவிர்க்க முடியாது என்றாலும், மற்ற மாணவர்களுக்கு இது தேவையற்ற சுமையாக அமைந்துள்ளது. மலைப் பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு நேரத்தை 2 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மின்சாரத் தட்டுப்பாட்டால் அதிலும் குளறுபடி ஏற்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகளுக்குப் பதிலாக, பாடத்திட்டத்தை பள்ளியின் இணையத்தளத்திலோ அல்லது இ-மெயில் மூலமோ அனுப்பி, மாணவர்களைப் படிக்க வைக்கலாம். அல்லது, ஏற்கனவே ஆசிரியர்கள் பாடம் நடத்தி பதிவு செய்த வீடியோக்களைப் போட்டு காண்பிக்கும் வழிவகையைப் பின்பற்றலாம். ஊரடங்கால் பெற்றோர்கள் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், ஆன்லைன் வகுப்புகளுக்கு என பெற்றோர்கள் மாதம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு எந்த ஒரு சுமையும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment