Breaking

Friday, 28 August 2020

ஆன்லைனில் குழந்தைகளுக்கு நிறைந்திருக்கும் ஆபத்துகள்: தற்காத்துக்கொள்வது எப்படி?



தற்போதைய காலத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்கள் மிகவும் அரது. அதிலும் குறிப்பாக சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களிலும் இணையப் பக்கங்களிலும் பலவிதமான நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட தீமைகளும் கொட்டிக்கிடக்கின்றன.

ஊரடங்கு நேரத்தில் மட்டும், அதாவது மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே யூடியூபில் இருந்து 1 கொடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பான்மையான வீடியோக்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதமாக அமைந்திருப்பதாக யூடியூப் நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களில் இருந்து தப்பிப்பது குறித்து ஏசியாவில் தமிழ் சார்பாக சைபர் பாதுகாப்பு அதிகாரி வினோத் குமார் ஆறுமுகத்திடம் பேசியபோது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு.

ஆன்லைனில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பது எப்படி?

கரோனா காலகட்டத்தில் குழந்தைகள் ஆனலின் வகுப்புகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டதால் ஆன்லைனில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது. இதனை முழுமையாக தடுக்கமுடியவில்லை என்றாலும், பெற்றோர்கள் சில வழிமுறைகளை பின்பற்றுவதன்மூலம் இதனை தடுக்கலாம். இதனை ஒரேடியாக கட்டுப்படுத்த முடியாது. படிப்படியாகவே குறைக்கமுடியும்.

ஆன்லைனில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரண்டாக பிரிக்க முடியும். முதலில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள். அதில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, சரியான ஆண்டி வைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துவது, குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் மற்றும் யாருடன் பேசுகிறார்கள் என்பதை கவனிப்பது. அல்லது குழந்தைகள் பயன்படுத்தும் செல்போனில் உள்ள செயலிகளில் Parents Control அல்லது kIds Safety போன்றவற்றை செயல்படுத்துவது என்பது போன்ற சில விஷயங்களை பின்பற்றலாம்.

மற்றொன்று அதிக நேரம் இணையத்தை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு உள்ளாகும் மன உளைச்சலில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். எப்பொழுதும் செல்போனையே பயன்படுத்த அனுமதிக்காமல் வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடவும் ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் இணையம் சார்ந்த குழந்தைகளின் பிரச்சனைகளை ஓரளவிற்கு குறைக்க முடியும்.

குழந்தைகளுக்கு எதிராக ஆன்லைனில் நடைபெறும் விஷயங்கள் என்னென்னெ?

சாதாரணமாக பணத்திருட்டில் இருந்து தொடங்கி குழந்தைகளை தவறாக பயன்படுத்தக்கூடியவை வரை இணையத்தில் நடக்கிறது. குழந்தைகளுக்கு தெரியாமலேயே அவர்களை ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்ய வைத்து அதன் மூலம் பணத்திருட்டில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். அதே சமயத்தில், குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களும் இணையத்தில் அதிகமாக இருக்கின்றனர். மேலும், வார்த்தைகளால் காயப்படுத்துவது, துஷ்பிரயோகம் செய்வது என 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் இணையத்தில் அதிகமாக இருக்கின்றன.வினோத் குமார் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு அதிகாரி



செல்போன்களில் குழந்தைகளை எடுக்கும் புகைப்படங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது?

இந்த விஷயத்தில் முடிந்த அளவு குழந்தைகளுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை குறைக்க வேண்டும். நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு மட்டும் தெரிவதுபடி வைத்துக்கொண்டு புகைப்படங்களை பகிரலாம். ஆனால், பொதுவாக பகிர்வதை தவிர்க்கலாம். எங்கேயாவது உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை தவறாக சித்தரிப்பதுபோல உங்களுக்கு தெரியவந்தால், அந்த புகைப்படத்தை இணையத்தில் இருந்து நீக்குவதற்கு பதிலாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம்.

குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும்போது அவர்கள் கிளிக் செய்யும் வேறு சில லிங்குகள் மூலம் மால்வேர் எனப்படும் தீம் பொருள் நம் செல்போனில் வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தெரியாத லிங்குகளை கிளிக் செய்தால் செல்போனில் இருக்கும் தகவல்கள் திருடப்படுகிறது. பெரியவர்களே இதுபோன்ற விஷயங்களை அதிகம் செய்துவரும் நிலையில், குழந்தைகளும் இந்த தவறை செய்கின்றனர்.

அதனால், குழந்தைகளிடம் பெற்றோர் அறிவுரை கூறவேண்டும். தேவையில்லாத செயலிகளையோ, அல்லது தேவையில்லாத லிங்க்களையோ செல்போன்களில் தரவிறக்கம் செய்யக்கூடாது என பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதே போல, செல்போனில் விளையாடும்போது கூட குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க பெற்றோர் அறிவுறுத்தவேண்டும்.

இந்த காலத்தில் குழந்தைகளை செல்போன் பயன்படுத்தாமல் தடுப்பது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் அவர்கள் ஸ்மார்ட் வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் போன்ற பலவற்றில் ஈடுபடுகின்றனர். அதனால், செல்போனை நேர்மறையாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்கவேண்டும். 8 வயது வரைக்கும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அந்த குழந்தை கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தவேண்டும் என்று அடம்பிடித்தால் பெற்றோர்கள் அந்த குழந்தையின் அருகிலேயே இருந்து கண்காணிக்கலாம்.

உங்களது குழந்தை கிணறு, ஆறு அல்லது நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்து விளையாடும்போது பெற்றோர் எப்படி கண்காணிக்கின்றனரோ அதே போல, குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்டிப்பாக கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். இணையம் என்பது பாதுகாப்பற்ற சூழல் என்ற அடிப்படையை பெற்றோர்கள் கட்டாயம் புரிந்துகொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment