Breaking

Sunday, 30 August 2020

படித்தும் வேலை இல்லாத நிலையால் தமிழகத்தில் 386 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடல்

ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால், கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 386 பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 32, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 9, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 39, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 402 என கடந்த 2015ம் ஆண்டு வரை இருந்தது. அதில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் வரை படித்தனர். இந்நிலையில் 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு பிறகு ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஆசிரியர் பயிற்சியில் சேருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

முதல்கட்டமாக 2010ம் ஆண்டில் சுமார் 600 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுதவிர தற்போது, தொடக்க கல்வித்துறையில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்து வருவதாலும், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாலும் ஆசிரியர் பயிற்சிக்கு மவுசு குறைந்துவிட்டது. அதனால் இந்த பயிற்சியில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் வெறும் 8000 பேர் தான் சேர்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரிதாப நிலையால் கடந்த 2015ம் ஆண்டில் இயங்கிய 402 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 279 பள்ளிகள் மட்டுமே 2017ம் ஆண்டில் செயல்பாட்டில் இருந்தன.

அவற்றில் 18,800 பேர் சேர்ந்தனர். அடுத்த இரண்டு ஆண்டில் சேர்க்கை வெகுவாக குறைந்தது. மேலும் தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தரவின் அடிப்படையில் 30 சதவீதத்துக்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூட வேண்டும் என்பதால் இந்த ஆண்டு 62 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு வருவதாலும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்க்கை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என கடந்த ஆண்டு 386 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment