தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அதன் மூலம் 6.94 கோடி பேர் பயன்பெற்று கொண்டிருக்கின்றனர். உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 243 கிடங்குகளும், மண்ணெண்ணெய்க்கு 309 பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக அட்டைகளை பெறுவதற்கு அரசின் இ-சேவை மையங்கள் மட்டுமின்றி tnpds.gov.in என்ற இணையதள வசதிகள் உள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவசமாக புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் வழங்கப்படுகின்றன. அதனை தேவைக்கேற்ப மக்கள் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை விவசாயிகளிடம் இருந்து நெல்லை இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்கிறது. இவை வாணிபக் கழகம் மற்றும் தனியார் ஆலைகள் மூலம் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியாக மாற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யும் பணிகளில் வாணிபக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இதனை விரைவாக அரிசியாக மாற்றப்பட வேண்டியது அவசியம். தமிழக நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் விரைவாக பச்சரிசியாக மாற்றலாம். பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் புழுங்கல் அரிசியாக மாற்றுவது எளிது. தமிழகத்தில் மாதந்தோறும் 1 லட்சம் டன் பச்சரிசி கிடைக்கிறது. ஆனால் தேவை 20 சதவீதமாக மட்டுமே உள்ளது.
எனவே கூடுதலாக இருக்கும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கி, அம்மாநிலங்களில் உள்ள புழுங்கல் அரிசியை தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கான அனுமதி கிடைத்த உடன் தமிழகத்திற்கு கூடுதல் புழுங்கல் அரிசி கிடைக்கும். இதனை குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பகிர்ந்தளித்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment